கெத்துல' விமர்சனம்
திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுமாக கமர்ஷியல் அம்சங்களோடு உருவாகியிருக்கிறது 'கெத்துல.'
கதை... அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் சலீம் பாண்டாவுக்கு பெண்களைக் கடத்தி தனது 'அந்தரங்க ஆசை'க்கு பலியாக்குவது வழக்கம். அந்த வரிசையில் மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரீரினுவையும் அணுகுகிறார். அவரை, அந்த நேரத்தில் அங்கிருந்த ஸ்ரீஜித் காப்பாற்றுகிறார். அதனால் சலீம் பாண்டாவுக்கு ஸ்ரீஜித் மீது கொலைவெறி வருகிறது. அதே நேரம் ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஸ்ரீஜித் மீது ரிரீனுவுக்கு காதல் உருவாகிறது. ஸ்ரீஜித் அந்த காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார்...
இப்படி பயணிக்கும் கதையில் ஸ்ரீஜித் காதலை ஏற்க மறுத்தது ஏன்? ஸ்ரீஜித்தை பழிவாங்கத் துடிக்கிற சலீம் பாண்டா என்ன மாதிரியான நடவடிக்கையில் இறங்கினார் என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் சிலபல திருப்பங்களோடு விரிகிறது. ஸ்ரீஜித் யார் என்ற முன்கதையில் அதிர்ச்சியும் விறுவிறுப்பும் இருக்கிறது.
இருவேறு தோற்றங்களில் வருகிற ஸ்ரீஜித்துக்கு உணர்வுகளை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்துகிற பாத்திரம். அதனை நேர்த்தியாக செய்திருப்பவர் ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார்.
ஆரம்பக் காட்சிகளில் கவர்ச்சியில் கவர்ந்தாலும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது, காதலனுக்கு நேர்ந்த பிரச்சனைகள் தெரிந்து மனம் கலங்குவது என தனது நடிப்புப் பங்களிப்பை நிறைவாகத் தந்திருக்கிறார்.
வில்லனாக வரும் சலீம் பாண்டாவின் மிரட்டலான நடிப்பு கதைக்கு பெரும் பலம். அமைச்சராக சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனராக ரவிகாலே என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது!
பரபரப்பான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் வி.ஆர்.ஆர். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
பாடல்களை ரசிக்கும்படி தந்திருக்கும் ஷீவா வர்ஷினி பின்னணி இசையிலும் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார். கே.ஷஷிதர் ஒளிப்பதிவு கச்சிதம்!
Rating 3.5 / 5
கருத்துகள் இல்லை