திருக்குறளுக்கு உரை எழுதிய முதல் பெண் உரையாசிரியர்! தமிழ்க்காரியின் திருக்குறள் 3.0 நூல் வெளியீட்டு விழா !
திருக்குறளுக்கு உரை எழுதிய முதல் பெண் உரையாசிரியர்! தமிழ்க்காரியின் திருக்குறள் 3.0 நூல் வெளியீட்டு விழா !
தமிழ்க்காரி என்று அறியப்படும் சித்ரா மகேஷ், உடுமலைப் பேட்டை அருகே உள்ள தளி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவர். உடுமலைப் பேட்டையில் ஆங்கிலப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் தமிழியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் குடியேறியவர், அங்கே 1330 குறள்களையும் சொல்லி சாதனையாளராக இடம் பிடித்தார்.
டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு தமிழ் அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வகித்து சமுதாயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
பள்ளிக்காலத்திலிருந்தே தமிழில் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமாக இருந்து வருபவர் ”என் செடி உன் பூக்கள்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார்.
முதுகலை படிக்கும் காலத்தில் சங்க இலக்கியங்களில் ஏற்பட்ட ஆர்வம், அமெரிக்காவிலும் தொடர்ந்தது. 30 குறுந்தொகைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து விளக்கத்துடன் அவற்றை எளிய வரிகளும் எழுதி “பூக்கள் பூத்த தருணம்” என்ற புத்தகமாக உருவாக்கியுள்ளார்.
சங்கக்கவிஞர் கபிலரின் குறிஞ்சிப் பாட்டு நூலை எளிய உரையுடன் கவிதைகளாவும் எழுதியுள்ளார். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் வண்ணமயமான் ஓவியங்களுடன் உருவான இந்த புத்தகம் “ ஓவியர் மருதுவின் தூரிகையின் காதல் கதை சொல்லட்டுமா?” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மகள் மற்றும் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ்க்காரி, தற்போது 1330 திருக்குறளுக்குக்கும் விளக்கவுரையுடன் குறுங்கவிதையாகவும் எழுதி ”திருக்குறள் 3.0 - தமிழ்க்காரி குறுங்கவிதைகள்”என்ற புத்தகமாக வெளியிடுவதற்காக அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார். இந்த புத்தகத்தின் வெளீயீட்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு திருக்குறள் 3.0 நூலை வெளியிட்டார்.
இதன் மூலம் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் முதல் பெண் எழுத்தாளர் தமிழ்க்காரி தான் என்ற சிறப்பும் பெறுகிறார்.
கருத்துகள் இல்லை