Header Ads

 


சற்று முன்காடுவெட்டி " ஜாதி படம் கிடையாது ஆர். கே. சுரேஷ் பேச்சு.. !

" காடுவெட்டி " ஜாதி படம் கிடையாது ஆர். கே. சுரேஷ் பேச்சு.. !

“ஆர்.கே.சுரேஷ் ஒன்பது ரஜினிக்கு சமம்”

 ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.வி.உதயகுமார் கிளப்பிய பரபரப்பு

 “சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன்”

 ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடி 

 “  ‘காடுவெட்டி’ படம் செய்யப்போகும் சம்பவம்”

இயக்குனர் மோகன் ஜி பரபரப்பு பேச்சு.

 காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:-

“ தல, தளபதி படங்களுக்கு இணையாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கிறது. நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ‘மலையூர் மம்பட்டியான்’ படம்தான் அவரை பெரிய ஹீரோவாக்கியது.  ‘சீவலப்பேரி பாண்டி’ படத்துக்கு பிறகு நெப்போலியன் பெரிய ஹீரோவாக வளர்ந்தார். அதேபோல்  ‘காடுவெட்டி’ படத்துக்கு பிறகு ஆர்.கே.சுரேஷ் பெரிய ஹீரோவாக உயர்வது நிச்சயம். பலருடைய கெட்ட எண்ணங்களை இந்த காடுவெட்டி வெட்டிவிடும்.

சமுதாய கதைகளில் பெரிய ஹீரோக்கள் நடிப்பதில்லை. இந்த மாதிரி கதைக்கு ஆர்.கே.சுரேஷ் மாதிரியான ஹீரோதான் வேண்டும். இது பெண்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் பெற்றோர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படமாகவும் இருக்கும்

சமுதாயத்தில் பெண்கள் முன்னேறிவிட்டதாக ஒரு பார்வை இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளோ  தமிழ் நடிகைகளை பார்த்து அயிட்டம் என்று பெயர் வைக்கிறார்கள். நீங்கள் எங்கேயோ குடித்துவிட்டு கூத்தடித்தவர்கள் நடிகைகளை பற்றி தவறாக பேசுகிறார்கள். இங்கு எல்லா நடிகைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.”

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசியபோது,

“இந்தப்படத்தில் நானே ஷாக் ஆகிற மாதிரி வணக்கம் தமிழா சாதிக், கானா பாடலை பண்ணியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள். இந்தப்படத்தில் நிறைய ஆக்ஷன் இருந்தாலும் நல்ல மெசேஜ் இருக்கிறது. முக்கியமா படத்தின் பின்னணி இசை மிகப்பெரிய வெற்றியை பெரும். நாயகன் ஆர்.கே. சுரேஷின் நடிப்பை பார்த்தபோதே படத்திற்கு தன்னாலேயே இசை வந்துவிட்டது.  ‘காடுவெட்டி’ பெரிய வெற்றியை அடையும்” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் பேசியதாவது:-

“இப்படியொரு படத்தை எடுக்க பயங்கர தில் வேண்டும். காடுவெட்டி கேரக்டரில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கிறார். காடுவெட்டி குரு எந்த அரசியல்வாதியையும் மதிக்கமாட்டார். தன்னுடைய ராஜ்ஜியம் தனி என்று வாழ்ந்த மகான். அதனால் இந்தப்படத்துக்கு பிரமாண்டமாக வேலை செய்ய வேண்டும் என்று தோன்றியது.

முக்கியமாக இங்கு ஒரு விஷயத்தை பேசியாகவேண்டும். ராமர் கோவில் பிரதிஷ்டை நடந்தபோது உலகத்தில் உள்ள அத்தனை இந்துக்களும் மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால் ராமருடைய நிறமான நீலத்தை தயாரிப்பு நிறுவனத்தின் பெயராக வைத்திருக்கும் இயக்குனர்    “6 மணிக்கு மேல் விளக்கேற்றாவிட்டால் நம்மை தீவிரவாதிகள் என்று சொல்லிவிடுவார்கள்” என்று வன்மத்தோடு பேசியது வேதனை அளிக்கிறது”

கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் பேசியபோது,

 “இந்தப் படத்தின் தலைப்பை பதிவு செய்ய வந்தபோது நான் தரமாட்டேன் என்று சொன்னேன். ஏனெனில் காடுவெட்டி என்பது மாவீரனின் பெயர். அதை யாரும் மிஸ் யூஸ் செய்துவிடக்கூடாது என்று பயந்தேன். ஆனால் இப்போது டிரைலரை பார்த்த பிறகு சரியானவர்களுக்கு இந்த தலைப்பை கொடுத்திருப்பது புரிகிறது. காடுவெடி குரு வீரப்பரம்பரை. அந்த கேரக்டரில் நடிப்பதற்கு வீரம் வேண்டும். அந்த வீரன்தான் ஆர்.கே.சுரேஷ்”என்றார்.

இயக்குனர் மோகன் ஜி பேசியதாவது:-

“இந்தப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவர உள்ளது.  ‘திரெளபதி’ படத்தின் ரிலீசுக்காக நான் பட்ட கஷ்டம் அதிகம். அதேபோல் காடுவெட்டியும் பல பிரச்சனைகளையும் வழக்குகளையும் சந்தித்துள்ளது. பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸ் ஆகும் படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. அந்தவகையில்  ‘காடுவெட்டி’ மிகப்பெரிய ஹிட் ஆகும். குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடுவார்கள். தமிழ் நாட்டில் தவறான காதலை எதிர்த்தவர் காடுவெட்டி குருதான். சாதிக்கின் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. கனல் கண்ணன் மாஸ்டர் ஆக்ஷன் ப்ரியர்களுக்கு பெரிய ட்ரீட்டையே வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அடுத்த வீரமான ஹீரோ ஆர்.கே.சுரேஷ்தான். இந்தப்படத்தில் பெரிய சம்பவம் இருக்கு.  ‘திரெளபதி 2’ விரைவில் தொடங்கும். அதற்குமுன்  ‘காடுவெடி’யை கொண்டாடி முடியுங்கள்”

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:-

“நான் காடுவெட்டி குருவின் ரசிகன். கிட்டத்தட்ட இதே கதைதான்  ‘சின்னக்கவுண்டர்’. இந்த டிரண்டை ஆரம்பித்து வைத்ததே நான்தான். ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால் அந்த படத்தின் இயக்குனரும் ஹீரோவும் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் தெரியுமா?.. கஷ்டங்கள் வலிகளை கடந்து வெற்றி பெறும்போதுதான் அடுத்தவர்களை மதிக்கும் பன்பு வரும். இங்கு எல்லோரும் இதயப்பூர்வமாக வாழ்த்தியுள்ளார்கள். அதனால் இந்தப்படம் நிச்சயம் வெற்றியை தரும். ஆர்.கே.சுரேஷ் சாதாரண ஆள் இல்லை. மிகப்பெரிய நடிகன். அவனுக்குள் ஒரு ரஜினி இல்லை ஒன்பது ரஜினி இருக்கார். 

வெற்றி பெறப்போகும் மனிதன்தான் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாவான். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அத்தனையையும் தகர்த்து ஆர்.கே.சுரேஷ் முன்னேறுவார். அவன் அடித்தால் 60 அடி தூரம் போய் விழுவாங்க. நடிச்சா எல்லோருடைய இதயமும் விழும்.  பேரரசு இயக்கிய ‘திருப்பாச்சி’,  ‘சிவகாசி’ படங்கள் விஜய்க்கு பெரிய திருப்புமுனையை தந்தது. அந்த கூட்டணி மீண்டும் சேரனும். வளர்த்து தூக்கிவிட்ட இயக்குனர்களை சேர்த்துக்கொண்டு போவதுதான் பண்பாடு. ஆனால் வெற்றிபெற்ற பிறகு அதற்கு காரணமானவர்களை மறந்துவிடும் பழக்கம் சினிமாவில் இருக்கு. இது நியாயமே இல்லை என்பது எனது கருத்து”

படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:-

“என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?

வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே.”

இறுதியாக படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகம் பேசியதாவது:-

 “காடுவெட்டியை என்னால் இயக்க முடிந்தது என்றால் அதற்கு முதல் காரணம் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்தான். இந்த படத்திற்கு சென்சார் 31 கட்டுகள் கொடுத்தது. சென்சார் பிரச்சனை, கோர்ட் வழக்கு என்று வந்தபோது அண்ணன் மகேந்திரன்தான் நம்பிக்கையையும் 100 யானை பலத்தையும் தந்தார்.

காடுவெட்டி என்ற தலைப்பை வைக்கக்கூடாது என்று சொன்ன சென்சார் போர்டிடம் எனது விளக்கத்தை கொடுத்தேன். காடுவெட்டி பெயருக்கு பெரிய வரலாறு இருக்கிறது. அந்த காலத்தில் மன்னர்கள் போர் பயிற்சிக்காக காட்டில்  ஒரு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி  போர் பயிற்சிக் களமாக பயன்படுத்துவார்கள். அதனை போர்க்குடி மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதனை ஊர்களாக மாற்றுவார்கள். அப்போது அதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள். இப்படி தமிழ் நாட்டில் 11 இடங்கள் உள்ளன. ஆக காடுவெட்டி ஒரு சரித்திரம் என்று விவாதித்தேன். இந்த தலைப்பு கிடைத்தது.

காதல் என்ற சப்பை காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை தலைமுறையாக வன்முறையை சேர்க்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் வட மாவட்டத்து மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, அரசியலை உள்ளது உள்ளபடி பேசும். நிறைய ஹீரோக்களிடம் இந்த கதையை சொன்னபோது அவர்களுக்கு கதை பிடித்திருந்தது.  டைட்டிலை சொன்னபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். ஆனால் படத்தின் தலைப்புக்காகவே இந்த படத்தில் நடிக்க ஆர்.கே.சுரேஷ் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோ கிடைப்பது அரிது. அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி”.


கருத்துகள் இல்லை