ஹாட் ஸ்பாட் 2 - திரை விமர்சனம் ! Hot spot 2 Review
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ஹாட் ஸ்பாட் 2 . மற்றும் அஸ்வின் , தம்பி ராமையா , எம் எஸ் பாஸ்கர் , பிரீடா , ஆதித்யா பாஸ்கர் , பவானி ஸ்ரீ , விக்னேஷ் கார்த்திக் , ரக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
கதை ஆரம்பமே :
அறிமுக இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் ஒரு எளிய வடிவத்தை மையமாக கொண்டு, நான்கு வெவ்வேறு கதைகள் மூலம் சமூகத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் விஷயங்களை பேச முயன்ற படம் தான் ‘ஹாட் ஸ்பாட் 2’. முதல் பாகத்தில் தனிநபர் சார்ந்த பிரச்சனைகள் பேசப்பட்டிருந்தால், இந்த இரண்டாம் பாகம் ஒரு சமூகத்தை நோக்கி தனது பார்வையை விரிவுபடுத்துகிறது.
இந்த பாகத்திலும் அதே தயாரிப்பாளரிடம், இன்னொரு அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கம் முதல் பாகத்தைப் போலவே நேர்மையானதாக இருந்தாலும், அவர் பேச விரும்பும் விஷயம் ஒருவருக்கானது அல்ல; சமூகத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அந்த சமூக பார்வை என்ன? அதன்மூலம் இயக்குநர் மக்களுக்கு சொல்ல விரும்பும் கருத்து என்ன? என்பதையே படம் மையமாகக் கொண்டு நகர்கிறது.
திரை நட்சத்திரங்களை தெய்வமாக பார்க்கும் வெறித்தனமான ரசிகர்கள், பெண்ணியம் மற்றும் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் எல்லைகளை புரிந்து கொள்ளாத இளைய தலைமுறை, தற்போதைய காதலின் நிலையை நினைத்து குழப்பம் அடையும் ஆண்கள் – என மூன்று தரப்பினரையும் அலசும் கதைகள் மூலம், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் எந்த ஒரு தரப்பையும் குற்றம் சாட்டாமல், இரு பக்கங்களிலும் இருக்கும் நியாயத்தை சமநிலையாக பேச முயற்சிக்கிறார். இதுவே இப்படத்தின் மிகப் பெரிய பலம்.
ஒரே ஒரு கதையை விரித்து இழுக்கும் முயற்சியில் செல்லாமல், சமூகப் பிரச்சனைகளை பேசும் குட்டி குட்டி கதைகளை ஒன்றிணைத்து சொல்லும் இயக்குநரின் பாணி, முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திற்கும் கைகொடுத்துள்ளது. சில இடங்களில் அந்த பாணி சற்று சறுக்கினாலும், பெரும் சர்ச்சைக்குள் போகாமல், ஒரு எல்லைக்குள் நின்று பேசும் அவரது அணுகுமுறை பாராட்டுக்குரியது.
நடிப்பில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
கதைகளை சொல்லும் கதாபாத்திரமாக வரும் பிரியா பவானி சங்கர், ஒரே இடத்தில் அமர்ந்தபடியே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். சில இடங்களில் அவருக்கு கொடுக்கப்பட்ட ‘பில்டப்’ ஓவராக தோன்றினாலும், அவரது நடிப்புத் திறன் அதை சமநிலைப்படுத்துகிறது.
தற்போதைய காதலின் நிலையை நினைத்து குழப்பமடையும் இளைஞராக வரும் அஷ்வின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அவரது நண்பராக வரும் அமரன் டைமிங் வசனங்கள் இயல்பான நகைச்சுவையை உருவாக்குகின்றன.
அழுத்தமான அறிவுரைகள் மூலம் இளைஞர்களை சிந்திக்க வைக்கும் கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கர் எப்போதும் போல தனது அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அதே சமயம், 2K கிட்ஸ்களுக்கு அதிரடியான எச்சரிக்கையை வழங்கும் வகையில் தம்பி ராமையா கொடுத்திருக்கும் நடிப்பு எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு கதைக்கும் ஏற்றவாறு களங்களையும் மனநிலைகளையும் பிரதிபலிக்கும் வகையில், ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால் வித்தியாசமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளனர்.
சதீஷ் ரகுநாதன் இசையில் முதல் பாகத்தின் பீஜிஎம் மற்றும் பின்னணி இசை, காட்சிகளுக்கு தேவையான உணர்வுகளைச் சேர்க்கிறது.
யு. முத்தயன் படத்தொகுப்பும், சி. சண்முகம் கலை இயக்கமும் படத்தின் ஓட்டத்திற்கு நல்ல துணை நிற்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், சூடான விஷயங்களை சுவாரஸ்யமாகவும், அதே சமயம் நடுநிலையாகவும் பேச முயற்சித்துள்ளார். எந்த ஒரு பிரச்சனையிலும் தீர்ப்பளிப்பவராக அல்லாமல், பார்வையாளர்களிடம் கேள்விகளை முன்வைத்து அவர்களை சிந்திக்க வைக்கும் விதத்தில் படத்தை முடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் ஒரே பாணியில் தெளிவான தீர்வுகள் இல்லாமல் தொடர்ந்து செல்லும் நடை, சில பார்வையாளர்களுக்கு சிறிய சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
மொத்தத்தில், ‘ஹாட் ஸ்பாட் 2’ சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்களை மிகுந்த பரபரப்போ, பிரசங்கத்தோ இல்லாமல், அமைதியாகவும் சமநிலையாகவும் முன்வைக்கும் ஒரு சிந்தனை தூண்டும் திரைப்படமாக உருவாகியுள்ளது. சமூக பிரச்சனைகளை வேறு கோணத்தில் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவம்.
Rating : 4 / 5








கருத்துகள் இல்லை