சற்று முன்



அப்போலோ மருத்துவமனை சாதனை!செயற்கை சுவாசக் கருவி ஆதரவில் 4 மாதங்கள் இருந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இரட்டை நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை!




அப்போலோ மருத்துவமனை சாதனை!செயற்கை சுவாசக் கருவி ஆதரவில் 4 மாதங்கள் இருந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இரட்டை நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை

பாராகுவாட் விஷம் அருந்தியதால் ஏற்பட்ட கடும் நுரையீரல் பாதிப்பிலிருந்து, இச்சிகிச்சையால் நோயாளி மீண்டு உயிர் பிழைத்தார்.

சென்னை, 5 ஆகஸ்ட் 2026: சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, விவி-எக்மோ (VV-ECMO) என்ற செயற்கை நுரையீரல் சாதனத்தின் மூலம் 41 வயது பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 119 நாட்கள் ஆதரவு அளித்த பின்னர், உயிர்காக்கும் இரட்டை நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. சர்க்யூட் மாற்றம் இன்றி ஒரே ஆக்ஸிஜனேட்டரைப் பயன்படுத்தி நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைக்குப் பாலமாக அமைந்ததுடன், மிக நீண்ட காலத்திற்கு விவி-எக்மோ பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளைத் துரிதமாகச் செயலிழக்கச் செய்யும் களைக்கொல்லியான பாராகுவாட்டை 50 மில்லிக்கும் குறைவாகத் தவறுதலாக அருந்தியதால், நோயாளியின் நுரையீரல் மீளமுடியாத அளவிற்கு மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வென்டிலேட்டர் மூலம் அளித்த சிகிச்சை பலனளிக்காத அளவுக்கு அவரது நுரையீரல் நிலைமை மோசமடைந்ததால், செயற்கை ரத்த ஓட்ட ஆதரவு (எக்மோ) மூலம் அவர் உயிரைக் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைப் பிரிவுக்கு விவி-எக்மோ ஆதரவுடன் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சை மூலம் அவரது சிறுநீரகச் செயல்பாடு சீரடைந்தாலும், அவரது நுரையீரல்கள் முற்றிலுமாகச் சேதமடைந்திருந்தன. இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழியாக இருந்தது.

எக்மோ ஆதரவில் இருந்த சுமார் நான்கு மாதங்களில், அப்போலோ மருத்துவமனையின் பல்துறை நிபுணர்கள் குழு, தற்காலிக சிறுநீரகச் செயலிழப்பு, ரத்தத்தில் நோய்த்தொற்று, அழுத்தம் காரணமாக உடலில் உருவான புண்கள் மற்றும் நீண்டகாலமாக நீடித்த மறுவாழ்வு சிகிச்சை உள்ளிட்ட பல மருத்துவச் சவால்களை வெற்றிகரமாகக் கையாண்டது. இந்தக் காலகட்டம் முழுவதும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாலும், சிறப்பான மருத்துவ நிர்வாகத்தாலும், அதே எக்மோ சர்க்யூட் மற்றும் ஆக்ஸிஜனேட்டர் மாற்றப்படுவதற்கான அவசியமின்றிச் சிறப்பாகச் செயல்பட்டன.

நுரையீரல் தானமளிப்பதற்குப் பொருத்தமான கொடையாளி கிடைத்தவுடன், இந்தப் பெண் நோயாளிக்கு வெற்றிகரமாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் எக்மோ சாதன ஆதரவிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்; மறுவாழ்வுச் சிகிச்சைகளை முடித்து, வெறும் ஐந்து வாரங்களில் சுயமாகச் சுவாசித்தபடி குணமடைந்த இப்பெண், அவரது குடும்பத்தினரோடு மகிழ்ச்சியோடு மீண்டும் இணைந்திருக்கிறார்.

"இறுதி-நிலை நுரையீரல் செயலிழப்பு நோயாளிகளுக்குச் சிறப்பான பலன்களை வழங்குவதில் நுட்பமான எக்மோ மேலாண்மை, மாற்று அறுவைசிகிச்சை மயக்கவியல் மற்றும் பல்துறை நிபுணர்களின் கூட்டுமுயற்சியின் தாக்கத்தை இச்சாதனை முன்னிலைப்படுத்துகிறது" என்று எக்மோ சேவைகள், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த நிபுணர் டாக்டர் பிரதீப் குமார் கூறினார்.

"சவாலான சூழ்நிலைகளிலும் ஒரே குழுவாக மருத்துவர்களின் நிபுணத்துவம் ஒன்றிணையும்போது சாதனையை செய்ய முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. படுக்கையிலேயே பல மாதங்களாக இருந்த நோயாளி, சிகிச்சைக்கு பிறகு சுயமாகச் சுவாசித்தபடி வீட்டிற்குச் செல்வது மனநிறைவை தருகிறது. இது அப்போலோ மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சைக்கும், உறுப்பு தானத்தின் தாக்கத்திற்கும் சிறந்த சான்றாகும்" என்று டாக்டர் குமுத் குமார் திதால் தெரிவித்தார்.

"நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில் மருத்துவக் குழுக்களின் நிபுணத்துவம் மற்றும் அக்கறையுடன் இணைந்து, அற்புதமான மாற்றத்தை உறுப்பு தானம் ஏற்படுத்தும் என்பதை இந்நிகழ்வு வலுவாக நினைவூட்டுகிறது. மேம்பட்ட சிகிச்சை பராமரிப்பை புதுமையான உத்திகளைப் பயன்படுத்தி வழங்குவதில் அப்போலோ அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது" என்று சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறினார்.

உயிர்காக்கும் சிகிச்சை: அதிநவீன வசதிகள் கொண்ட மாற்று அறுவை சிகிச்சை மையங்களில், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகளுக்கு நீண்டகால எக்மோ கருவியின் ஆதரவுடன் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து உயிர்காக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

உறுப்பு தானம்: சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கும் இத்தகைய சிகிச்சைகள், உறுப்பு தானத்தின் மாபெரும் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

அரசின் தடை உத்தரவு: இந்த நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதே காலகட்டத்தில், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் ஜூலை 13, 2026 அன்று 'பராகுவாட் டைகுளோரைடு' தடை உத்தரவின் வரைவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரும் உயிராபத்தை விளைவிக்கும் இந்தக் களைக்கொல்லியின் இறக்குமதி, உற்பத்தி, போக்குவரத்து, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகிய அனைத்தையும் முழுமையாகத் தடை செய்ய இந்த வரைவு அறிக்கை முன்மொழிகிறது.


கருத்துகள் இல்லை