பியார் பிரேமா கல்யாணம் திரை விமர்சனம் !
“பொறந்த வீட்டை விட்டு புருசன் வீட்டுக்குத்தான் பொண்ணு போகணுமா? பொண்ணு வீட்டுக்கு மாப்பிள்ளை வரக்கூடாதா?” — இதுதான் படத்தின் ஒன்லைன். இந்தக் கேள்வியை மையமாக வைத்து, காதல், திருமணம், குடும்பம் ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
மாஸாக ஒரு காதல் செய்து, கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஹீரோ இளனின் டார்கெட். அதற்கேற்ற ஜோடியாக சான்வி மேக்னா வருகிறார். இருவருக்கும் காதல் மலர, கல்யாணத்திற்கும் ரெடியாகிறார்கள். ஆனால், தாலி ஏற்றுக்கொண்ட அடுத்த நொடியே மணப்பெண் சான்வி ஓடிவிடுகிறார். அவர் ஏன் ஓடினார்? அதன் பின்னணி என்ன? என்பதற்கான பதிலைச் சொல்கிறது படத்தின் இரண்டாம் பாதி.
அறிமுக ஹீரோவாக இளன் சில இடங்களில் பாஸ்மார்க் வாங்குகிறார். சில காட்சிகளில் இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்து, நல்ல நடிகராக வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆனால், படத்தில் வேற லெவலில் ஸ்கோர் செய்கிறார் சான்வி மேக்னா. அழகும் நடிப்பும் இணைந்து, கதாபாத்திரத்தை ரசிக்க வைக்கிறார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
ராதிகா சரத்குமார் வழக்கம்போல தனது கதாபாத்திரத்தை அதகளப்படுத்தியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், செந்தில் ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்கிரீன் டைம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. யோகிபாபுவின் கேரக்டரும், அவரது நடிப்பும் படத்திற்கு சிறப்பான ப்ளஸ்.
தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கவனம் பெறுகிறது. தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல மைலேஜ் கொடுக்கிறது. காட்சிகள் அழகாகவும் ரசிக்கும்படியும் இருக்கின்றன.
படத்தின் இன்னொரு பெரிய பாசிட்டிவ் யுவன் சங்கர் ராஜாவின் இசை. பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் படத்தின் உணர்வுக்கு நன்றாக கைகொடுக்கிறது. குறிப்பாக பாடல்களும், ரீ-ரெக்கார்டிங்கும் டாப்.
திரைக்கதையைப் பொறுத்தவரை, முதல் பாதி கலகலவென நகர்கிறது. குறிப்பாக முதல்வன் படத்தின் நேர்காணல் காட்சியை இமிடேட் செய்து எடுக்கப்பட்ட காட்சி ரசிக்க வைக்கிறது. அந்தக் காட்சியில் வசனமும் டைமிங்கும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஆனால், இரண்டாம் பாதியில்தான் படத்தின் வேகம் சற்று குறைகிறது. ஒரே இடத்தைச் சுற்றியே கதை நகர்வதும், ஒரே மாதிரியான டோனில் காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதும் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வசனம் மற்றும் கூடுதல் திரைக்கதையில் பணியாற்றியுள்ள ஹரிஷ், இயக்குநர் இளனுடன் இணைந்து இரண்டாம் பாதியை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம்.
மொத்தத்தில், புதுமையான ஒரு கேள்வியை முன்வைக்கும் காதல் கதையாக படம் கவனம் பெறுகிறது. முதல் பாதியின் கலகலப்பு, சான்வி மேக்னாவின் நடிப்பு, யுவன் சங்கர் ராஜாவின் இசை, தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் பலம். அதே நேரத்தில், இரண்டாம் பாதியின் தொய்வான திரைக்கதை படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.
காதல், திருமணம், குடும்பம் குறித்து ஒரு வித்தியாசமான கேள்வியை முன்வைக்கும் இந்தப் படம், சில குறைகள் இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை