சற்று முன்



பாரிஸ் கஃபே – திரை விமர்சனம் !



அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணரும் சமூக சேவகியுமான அனுமோலும் அன்புடன் வாழும் தம்பதியினர். மருத்துவ கருத்தரங்கிற்காக பாரிஸ் செல்லும் குரு சோமசுந்தரம், அங்குள்ள காஃபே ஒன்றில் சென்னை இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அந்த ஜோடி தொடர்பான உண்மையை அறிந்து சென்னை திரும்பும் அவர், அவர்கள் உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை மனைவியிடம் தெரிவிக்கிறார்.

இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை அறியும் அனுமோல், கணவர் மீது கோபமடைந்து அவரை விட்டு பிரிகிறார். இதனால் அதிர்ச்சியடையும் மகள் அர்ச்சனா, தனது காதலர் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவில் இருந்து வந்து பெற்றோரை மீண்டும் சேர்க்க முயற்சி செய்கிறார். அந்த இளம் காதல் ஜோடி யார்? அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களின் மரணத்துக்கும் குரு சோமசுந்தரத்துக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் மையக்கதை.

ஆணவப் படுகொலை என்ற சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை இயக்குநர் சரஜ் சீலன், வெறும் பிரசாரப் படமாக இல்லாமல் காதல், குடும்ப உறவு மற்றும் உணர்வுகளுடன் இணைத்து சொல்லியிருக்கிறார். இதனால் கதையின் சமூகக் கருத்து அழுத்தமாக மனதில் பதிகிறது.

குரு சோமசுந்தரமும் அனுமோலும் கணவன்-மனைவியாக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக, ஆணவப் படுகொலையின் பின்னணியை அறிந்து கொந்தளிக்கும் அனுமோலின் நடிப்பு உணர்வுப்பூர்வமாக உள்ளது. குடும்பத்துக்காக ஒரு தவறை செய்யும் குரு சோமசுந்தரம், அதற்கான விளைவுகளையும் எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தை அளவான நடிப்புடன் கையாண்டிருக்கிறார்.

விஜய் விஷ்வா, அர்ச்சனா ஜோடியின் துள்ளலான நடிப்பும் படத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. சாய் விக்கி, நயனா சாய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களின் வலியையும் வேதனையையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

சதீஷ்.ஜியின் ஒளிப்பதிவு அமெரிக்கா, பாரிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளது. கே-யின் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு தேவையான உணர்வை கொடுக்கிறது. வி.ஜே.சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.

மொத்தத்தில், ஆணவப் படுகொலை என்ற முக்கியமான சமூகப் பிரச்சினையை காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் இணைத்து, சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கும் படமாக ‘பாரிஸ் கஃபே’ உருவாகியுள்ளது. சமூகக் கருத்துடன் கூடிய காதல் கதையை விரும்புபவர்களுக்கு படம் கவனம் ஈர்க்கும்.

Rating : 3 /



கருத்துகள் இல்லை