சற்று முன்



புற்றுநோயை வென்ற குழந்தைகளின் உயர்கல்விக்கு நிதியுதவி: MGM-ன் ‘ஸ்வஸ்தி’ திட்டம் அறிமுகம் !


உலக ரோஜா தினத்தில் 100 எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளின் வெற்றிகரமான நிறைவை கொண்டாடிய MGM புற்றுநோய் மருத்துவமனை; கல்வி நிதியுதவிக்கான ‘ஸ்வஸ்தி’ திட்டம் அறிமுகம் ! 

 புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், MGM புற்றுநோய் மருத்துவமனை உலக ரோஜா தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது. ஏப்ரல் 2024 முதல் 100 எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதையும், புற்றுநோயை வென்று எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி வழங்கும் ‘ஸ்வஸ்தி’ அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதையும் இந்நிகழ்வு சிறப்பித்தது.

ஏப்ரல் 2024 முதல் MGM புற்றுநோய் மருத்துவமனையில் தலசீமியா, அரிவாள் செல் இரத்தசோகை, அப்ளாஸ்டிக் அனீமியா, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடுகள் மற்றும் லுகேமியா, மைலோமா உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோயாளியின் சொந்த உயிரணுக்களைப் பயன்படுத்தும் ஆட்டோலோகஸ் (Autologous) முறை மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட உயிரணுக்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் முதல், மிகவும் சிக்கலான அரைப் பொருத்தம் கொண்ட எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் (Half-Matched Transplants) வரை பல்வேறு சிகிச்சை முறைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அனாமயா சில்ட்ரன்ஸ் டிரஸ்ட் (Anamaya Children’s Trust) நிறுவனத்துடன் MGM புற்றுநோய் மருத்துவமனை இணைந்து, ‘ஸ்வஸ்தி’ அட்டை மூலம் புற்றுநோயை வென்ற குழந்தைகள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு உயர்கல்வியில் நுழையும்போது, அவர்களின் கல்விக்காக நிதியுதவி வழங்கவுள்ளது. அரசின் இலவச சிகிச்சைத் திட்டங்களின் கீழ் சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு தகுதிக் காரணிகளின் அடிப்படையில் கல்வி நிதியுதவி பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


புற்றுநோயை வென்று மீண்டவர்களைக் கௌரவிக்கும் வகையில், இந்நிகழ்வின்போது அவர்களுக்கு ரோஜாப் பூக்கள் அன்பின் வெளிப்பாடாக வழங்கப்பட்டன. 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட, புற்றுநோயை வென்றவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


இந்த மாலை நிகழ்வில், மனதைக் கவரும் கலை நிகழ்ச்சிகள், பாடல் மற்றும் நடனம், புற்றுநோயை வென்ற சாதனையாளர்களின் ஊக்கமளிக்கும் உரைகள், மேஜிக் ஷோ மற்றும் குழந்தைகளுக்கான வேடிக்கையான விளையாட்டுகள் இடம்பெற்றன. சமூக ஒற்றுமை உணர்வை இந்நிகழ்வு வலுப்படுத்தியதுடன், நம்பிக்கை, தைரியம் மற்றும் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான உணர்வுப்பூர்வமான ஆதரவை வழங்குவதன் அவசியத்தையும் இந்நிகழ்வு எடுத்துரைத்தது.


திரைப்பட இயக்குநர் திரு. எச். வினோத், பின்னணிப் பாடகி திருமதி விஷ்ணுபிரியா ரவி, ஸ்வர்ண பாரத் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் திருமதி தீபா வெங்கட், தியாரா கிட்ஸ் நிர்வாக அறங்காவலர் திருமதி அபர்ணா ஷியாம் மற்றும் DKMS Foundation India-வின் DRM தலைவரான டாக்டர் நிதின் அகர்வால் ஆகியோர், MGM Healthcare-ன் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் அவர்களுடன் இணைந்து இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வு குறித்து MGM புற்றுநோய் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி திரு. சரவணகுமார் ராஜன் கூறியதாவது:

“புற்றுநோயை வெல்வது பயணத்தின் முடிவல்ல; இது நம்பிக்கையும் புதிய சாத்தியக்கூறுகளும் நிறைந்த ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். புற்றுநோயை வெல்லும் ஒவ்வொரு நோயாளியும் எவ்வித நிதித் தடைகளுமின்றி தங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் தொடரவும், அடையவும் தகுதியானவர்கள்.


‘ஸ்வஸ்தி’ அட்டையின் மூலம், எங்களது ஆதரவை சிகிச்சைக்குப் பிறகும் நீட்டித்து, இந்த இளம் போராளிகளின் கல்விப் பயணத்திற்கு எங்களால் இயன்ற அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். இதில் எங்களுடன் கைகோர்த்த கூட்டாளர்களுக்கு நாங்கள் நன்றிகடன்பட்டுள்ளோம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், நம்பிக்கையுடன் ஒளிமயமான எதிர்காலத்தை இக்குழந்தைகள் உருவாக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.”


குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் தீனதயாளன் பேசுகையில் கூறியதாவது:

“இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 75,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகமாகத் தோன்றினாலும், நவீன மருத்துவ முன்னேற்றங்கள், நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள், இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சை, நோய் எதிர்ப்புச் சிகிச்சை போன்ற மேம்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் உயிரணு சிகிச்சைத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை நோயைக் குணப்படுத்தும் விகிதத்தை 90 சதவீதம் வரை மேம்படுத்தியுள்ளன.


சரியான மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்புடன், நோயாளிகள் மற்றவர்களைப் போலவே இயல்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த முடியும்.”

ரத்தப் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எம். கோபிநாதன் கூறுகையில்:

“உலக ரோஜா தினம், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது என்பது வெறும் மருத்துவச் சிகிச்சை மட்டுமல்ல என்பதை நினைவூட்டுகிறது. இது நம்பிக்கை, பரிவு, புரிந்துணர்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு போன்ற பண்புகளைப் பற்றியது.


நோயாளிகளுடன் தோழமையையும் ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தவும், புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் தைரியத்தையும் விடாமுயற்சியையும் கொண்டாடவும், புற்றுநோயாளிகளைக் கவனித்துக்கொள்பவர்களின் அயராத கடின உழைப்பை அங்கீகரித்து கௌரவிக்கவும் இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பாகும்.

நோயாளி குணமடைவதில் உணர்வுசார் ஆதரவும் விழிப்புணர்வும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எந்தவொரு நோயாளியும் தனிமை உணர்வில் தவிக்காமல் இருப்பதை இதுபோன்ற முயற்சிகள் உறுதி செய்கின்றன.”

அனைத்து வயது நோயாளிகளுக்கும் மிகவும் பாதுகாப்பானதாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை முறைகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. MGM புற்றுநோய் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம், ஆரோக்கிய ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் எளிய பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் நோயாளிகளும் இந்த உயிர்காக்கும் சிகிச்சையை எளிதாக அணுகிப் பெற்று, தேவையான ஆதரவைப் பெற முடிகிறது.



கருத்துகள் இல்லை