சற்று முன்



ஆசியாவிலேயே முதல்முறை அரிய ரத்தக்குழாய் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை சிம்ஸ் மருத்துவமனை சாதனை !


 மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆசியாவிலேயே முதல் முறையாக மிகப்பெரிய பெருநாடி-தமனி அழற்சி ('அயோர்டோஆர்டெரிடிஸ்') எனப்படும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளவயது நோயாளிக்கு பெருந்தமனியில் ஏற்பட்ட மிகப்பெரிய வீக்கத்தைச் சரிசெய்யும் அறுவைசிகிச்சையை சிம்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளது.

மூச்சுத் திணறல் மற்றும் அதிக இதயத் துடிப்பு ஆகிய பாதிப்புகளுடன் மிக ஆபத்தான நிலையில் இச்சிறுவன் எமது மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டான். சிறுவனால் படுத்து உறங்கக் கூட முடியாத நிலை இருந்தது. பெருந்தமனியில் ஏற்பட்டிருந்த வீக்கம் வெடித்தால் உயிரிழப்பு ஏற்படும் இடர்வாய்ப்பு இருந்ததால், அவசரகால அடிப்படையில் இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. உடலின் மிகப்பெரிய இரத்தக் குழாயான பெருந்தமனி மிகவும் வீங்கியிருந்ததால், நெஞ்சுப் பகுதியிலேயே அதன் துடிப்பைப் பார்க்க முடிந்தது; இது பார்ப்பவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.


சிறுவனைப் பரிசோதித்த உடனேயே தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டோம். அதில், மார்புப் பகுதி பெருந்தமனியில்  மிகப்பெரிய வீக்கம் இருப்பதும், அது பெருநாடி-தமனி அழற்சி ('அயோர்டோஆர்டெரிடிஸ்') அல்லது 'டகாயாசு ஆர்டெரிடிஸ்' எனப்படும் அரியவகை நோயால் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பால் இரத்தக் குழாய்கள் தடித்து, சில நேரங்களில் பலூன் போல வீக்கமடையும். நோய் தீவிரமான நிலையில் இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு இச்சிறுவனைத் தயார்படுத்தும் விதமாக முடக்குவாதவியல் துறைக்குப் பரிந்துரைத்தோம்.


 இரத்தக் குழாய்களில் வீக்கம் மற்றும் அழற்சி இருக்கும்போது அறுவைசிகிச்சை செய்வது அதிகப்படியான இரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்பதோடு, மருத்துவ ரீதியாகவும் மிகவும் சவாலானது. எனவே, அறுவைசிகிச்சைக்கு முன்பாக மருந்துகள் மூலம் சிறுவனின் உடல்நிலையைச் சீராக்க வேண்டியிருந்தது. 'டகாயாசு ஆர்டெரிடிஸ்' நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவது மிகவும் அரிதானது. பெருந்தமனி வீக்கத்திற்கான அறுவைசிகிச்சைகளில் சுமார் எமது 40 ஆண்டுக்கால அனுபவத்தில், நாங்கள் சிகிச்சை அளித்த மிகக் குறைந்த வயதுடைய நோயாளி இச்சிறுவன் தான்.

 

அறுவைசிகிச்சை செயல்முறை: பெருந்தமனியில் ஏற்பட்டிருந்த வீக்கம் மார்பெலும்புக்கு மிக அருகில் இருந்ததால், வழக்கமான முறையில் மார்பைத் திறந்தால் பெருநாடியில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தான சூழலை உருவாக்கக்கூடும். இதன் காரணமாக, முதலில் தொடையின் இடுக்குப் பகுதியில்  உள்ள தமனி மற்றும் சிரையில் சிறிய துளையிட்டு, சிறுவனை 'இதய-நுரையீரல் இயந்திரத்துடன்' இணைத்தோம். சிறுவன் சுமார் 18 கிலோ எடை மட்டுமே இருந்ததால், மிகவும் நுண்ணிய குழாய்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. 

அதன் பிறகு, 'டீப் ஹைபோதெர்மிக் சர்குலேட்டரி அரெஸ்ட்' எனப்படும் மருத்துவ முறையின் மூலம் சிறுவனின் உடல் வெப்பநிலையைச் சுமார் 16 டிகிரி செல்சியஸுக்குக் குறைத்தோம். மருந்துகள் செலுத்தி இதயத் துடிப்பை நிறுத்தியதோடு, உடலின் அனைத்துப் பகுதிகளுக்குமான இரத்த ஓட்டத்தையும் சுமார் 40 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தினோம். அந்த இடைவெளியில், பெருந்தமனியைத் திறந்து, பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு 'டாக்ரான் கிராஃப்ட்'  எனப்படும் செயற்கை இரத்தக் குழாயைப் பொருத்தி தையலிட்டோம்.

அறுவைசிகிச்சை முடிந்ததும், தையலிட்டு இரத்த நாள வீக்கம் இருந்த பகுதியை அகற்றிச் சரிசெய்தோம். இதய-நுரையீரல் இயந்திரத்தின் உதவியுடன் சிறுவனின் உடல் வெப்பநிலையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து, இயந்திரத்திலிருந்து அப்புறப்படுத்தினோம். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுவன், மிக விரைவாகக் குணமடைந்து 9-வது நாளில் நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினான்.

"தற்போது தங்களது மகன் முற்றிலும் மாறுபட்ட புதிய குழந்தையாகத் திகழ்வதாகவும், தனது வழக்கமான அன்றாடச் செயல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அவனது பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இப்போது அவனால் எவ்வித சிரமமும் இன்றி நடக்கவும், மூச்சுத் திணறல் இன்றி நன்றாக உறங்கவும் முடிகிறது."


 இருப்பினும், நோய் மீண்டும் தீவிரமடைவதையும், பெருந்தமனியின் மற்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படுவதையும் தடுக்க அவன் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதய மற்றும் நுரையீரல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பாஷி V. வேலாயுதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இக்குழுவில் இதய மற்றும் நுரையீரல் அறுவைசிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் முகமது இத்ரீஸ் உடனிருந்தார்; மயக்கவியல் பிரிவு மூத்த ஆலோசகர்களான டாக்டர் அஜு ஜேக்கப் மற்றும் டாக்டர் அருண் குமார் ஆகியோர் மயக்கவியல் தொடர்பான ஒத்துழைப்பை வழங்கினர். மேலும், அறுவைசிகிச்சையின் போது உதவுவதற்கான அறுவைசிகிச்சை அரங்கு செவிலியர்கள், இதய-நுரையீரல் இயந்திரத்தை இயக்கும் 'பெர்ஃப்யூஷனிஸ்ட்' மற்றும் மயக்கவியல் குழுவிற்கு உதவும் அறுவைசிகிச்சை அரங்குத் தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.



கருத்துகள் இல்லை