தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் வருமான வரித்துறை அதிகாரி !
தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி*
தமிழ் மொழியின் மேல் கொண்ட தீராத பற்றினால் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட
எஸ் பி சக்ரபோர்த்தி என்கிற சோமன்.
சக்ரபோர்த்தியின் பெற்றோர் மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறினர். சென்னையில் பிறந்து, அயன்புரத்தில் வளர்ந்த இவர், வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
திருக்குறள் மொழிபெயர்ப்பில் தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை குறித்து பேசிய சக்ரபோர்த்தி, "சிறு வயது முதலே தமிழ் மொழி மீது எனக்கு தீவிர பற்று ஏற்பட்டது. பள்ளி பருவத்தில் திருக்குறளில் உள்ள மனப்பாடச் செய்யுள் எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. பின்னர் திருக்குறளின் மொழிப் பெயர்ப்புகளைப் படிக்கும்போது, திருக்குறளை மிகவும் எளிமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சிலர் இன்னுமொரு மொழிபெயர்ப்பு எதற்கு என்றும் ஐயம் எழுப்பினர். ஆனால், தமிழ் மொழிப் பற்றினால் இந்தப் பணியை மேற்கொண்டேன். ஏனெனில், சில மொழிப் பெயர்ப்புகளைப் படித்து புரிந்து கொள்வதில் மிகவும் சிரமப்பட்டேன். மேலும், ஆசிரியரின் கருத்தியலுக்கு ஏற்ப மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. இது சில உரைநூல்களுக்கும் பொருந்தும்," என்றார்.
தனது பள்ளியின் தமிழாசிரியர் திரு மருதூர் இரங்கராசனார் இந்த மொழிபெயர்ப்புக்கு உறுதுணையாக இருந்ததாக சக்ரபோர்த்தி கூறினார்.
"திருக்குறளை மொழி பெயர்க்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தபோது என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய எனது பள்ளியின் தமிழாசிரியர் திரு மருதூர் இரங்கராசனாரின் தொடர்பு கிடைத்தது. அவரை நேரில் சந்தித்து திருக்குறள் மொழி பெயர்ப்பில் எனக்குள்ள ஆர்வத்தைத் தெரிவித்தேன், அவரின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தன. நிறைய திருக்குறள் புத்தகங்களை அவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மேலும், உன் தாய்மொழியான வங்காள மொழியில் முதலில் நீ மொழிபெயர்க்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அதனை தொடர்ந்து மேற்குவங்க மாநிலம், ஹுக்ளி மாவட்டம், மாக்லா கிராமத்தில் வசிக்கும் என் தாய்மாமா திரு அமுல்யா பூஷன் சக்ரபோர்த்தியிடம் சென்று எனது முயற்சிக்கு உதவுமாறு கேட்டேன். அவர் திருமதி போனோனி நாக் மற்றும் அவரின் மகன் திரு சாத்விக் சக்ரபோர்த்தியின் உதவியுடன் மூன்று ஆண்டுகளில் இப்பணியை முடித்துக் கொடுத்தார். அவர் தட்டச்சு செய்த உரையின் இறுதி படிவத்தை தானே திருத்தினார். ஆனால், அவரது திடீர் மரணம் என்னை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. அவரின் நினைவாக வங்க மொழியில் திருக்குறளை வெளியிட்டேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மொழிபெயர்ப்புடன் திருக்குறளை எல்லா தரப்பு தமிழ் மக்களுக்கும், தமிழ் தெரியாதவர்களுக்கும் எடுத்துச்செல்ல, தமிழ் உரையையும் எளிய நடையில் எழுத முயற்சி செய்துள்ளதாக சக்ரபோர்த்தி தெரிவித்தார்.
"மிகவும் கடினமான கொரோனா தொற்றுநோய் காலத்தில், என் பணியை மனதாலும் ஆன்மாவாலும் முழு மூச்சில் ஈடுபட்டு முடிக்க நினைத்தேன். அதன் காரணமாகத்தான் திருக்குறளின் தமிழ் எளிய உரை மற்றும் பிழையில்லாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பும் செய்து வெளியிட்டுள்ளேன். இந்த பண்டைய சங்க கால தமிழ் இலக்கியத்தின் தலைச்சிறந்த படைப்புக்கு என்னால் இயன்ற வரை என் பணியை செவ்வனே செய்துள்ளேன் என்ற நம்பிக்கை என்னுள் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.
எனது இந்த தமிழ்ப் பயணத்தில் என் முயற்சிக்கு பல நண்பர்கள், உறவினர்கள் மற்றும் என் நலம் விரும்புவோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர் அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்று சக்ரபோர்த்தி கூறினார்.
"எனது முதல் புத்தகத்தை வெளியிடும் டிஸ்கவரி பதிப்பகத்தின் மு.வேடியப்பன் அவர்களுக்கும் அவரின் உதவியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தகத்திலிருந்து கிடைக்கும் வருவாய் அனைத்தையும் பொதுத் தொண்டுக்கே செலவிடப்படும் என்பதையும் கூறிக் கொள்கிறேன்," என்று சக்ரபோர்த்தி மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை