Header Ads

 


சற்று முன்தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள்.. பாதுகாப்பு அதற்கேற்றவாறு இருக்கிறதா?” ISACA நடத்தும் கருத்தரங்கு !

தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள்.. பாதுகாப்பு அதற்கேற்றவாறு இருக்கிறதா?” ISACA நடத்தும் கருத்தரங்கு !

சென்னை: 8 செப்டம்பர் 2023: தகவல் அமைப்புகளின் ஆளுகை மற்றும் தகவல் தொழில்நுட்பம்  மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக உலகளவில் தலைமை அமைப்பாக இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்  & கண்ட்ரோல் அசோஸியேஷன் (ISACA) இருந்து வருகிறது. இந்தியாவில் இச்சங்கத்தின் முதல் கிளை சென்னையில் நிறுவப்பட்டதிலிருந்து  இத்துறையில் தொடர்ச்சியான கற்றல் மீதும், பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்புவது மீதும் பொறுப்புறுதி கொண்டு  37 ஆண்டுகளாக சிறப்பாக சேவையாற்றி வருகிறது.  சென்னையின் லீ ராயல் மெரீடியன் வளாகத்தில் நடைபெறுகின்ற இந்த ஆண்டின் வருடாந்திர கருத்தரங்கு, “தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள். பாதுகாப்பு அதற்கேற்றவாறு இருக்கிறதா?” என்ற கருப்பொருளை கொண்டிருக்கிறது.  தொழில்நுட்ப முன்னேற்றம் அதி வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், நமது பாதுகாப்பு நடவடிக்கைகள், அந்த முன்னேற்றத்திற்கு ஈடு கொடுக்கின்ற வகையில் இருக்கின்றனவா என்ற அம்சத்தை இக்கருத்தரங்கு அலசுகிறது.  பாதுகாப்பில் சுறுசுறுப்பான திறனை மதிப்பிடுவதும், புத்தாக்க அணுகுமுறைகளை ஆராய்வதும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதும் உருவாகி வரும் பாதுகாப்பு போக்குகள் குறித்து விவாதிப்பதும் இக்கருத்தரங்கின் பிற முக்கிய குறிக்கோள்களாகும்.  ரேன்சம்வேர், சைபர் வார்ஃபேர் மற்றும் உள்அபாயங்கள் ஆகியவற்றை எதிர்த்து, சமாளித்து வெற்றி காண்பது மீதும் இக்கருத்தரங்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.  

கேரள மாநிலத்தின் உளவுத்துறை ஏடிஜிபி  திரு. மனோஜ் ஆப்ரஹாம் ஐபிஎஸ், இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், சைபர் செக்யூரிட்டி என்பது, நிகழ்வுக்குப் பிறகு செய்யப்படும் ஒரு பின் சிந்தனை நிகழ்வாக இருக்கக்கூடாது.  மாறாக, எந்தவொரு பாதுகாப்பு உத்தியின் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். சைபர்செக்யூரிட்டி தொழில்முறை நிபுணர்கள், அவர்கள் பாதுகாக்கின்ற அதே தொழில்நுட்பத்திற்கு இணையாக, சுறுசுறுப்போடும், அதே அளவு வேகத்தோடும் இருக்கவேண்டும் என்ற அவசியத்தை வலுவாக சுட்டிக்காட்டினார்.  நிறுவனங்கள் கீழ்வரும் இருவகையினங்களில் வருகின்றன என்று குறிப்பிட்ட ராபர்ட் முல்லரின் மிகப்பிரபலமான வாசகத்தை திரு. ஆப்ரஹாம் நினைவுகூர்ந்தார்: ‘தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்ற நிறுவனங்கள் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகவிருக்கும் நிறுவனங்கள் என்பவையே இந்த இரு வகையினங்கள்.’ சைபர் செக்யூரிட்டி தளத்தில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்ற சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கு இத்துறையில் பணியாற்றுபவர்கள், அவர்களின் மனநிலையை விரிவாக்குவது, திறன் அளவுகளை ஆழமாக்குவது, பாதுகாப்பு கருவிகளை கூர்மையாக்குவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டு காட்டினார். 

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் – ன் கார்ப்பரேட் துணைத்தலைவர்   & கல்வி தொழில்நுட்ப பிசினஸ் பிரிவின் தலைவர் Ms. ஸ்ரீமதி சிவசங்கர் இக்கருத்தரங்கில் சிறப்புரை வழங்கினார். செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளை விட பணியாளர்களுக்கு முன்னுரிமையளிப்பது இன்றியமையாததாக திகழும் சைபர்செக்யூரிட்டியின் செயல்தளம் பற்றி அவர் விரிவாகப் பேசினார்.  இதை சாதிப்பதற்கு, இயக்குனர்கள் குழுவின் உறுப்பினர்களிலிருந்து எக்ஸிகியூட்டிவ்கள் வரை  நிறுவன அதிகார அமைப்பின் முதல் நிலையிலுள்ள தனிப்பட்ட பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறவாறு பயனாளிகளுக்கு தோழமையானதாகவும் மற்றும் ஈடுபாடு கொள்ளுமாறும், இதற்கான பயிற்சி திட்டங்களை உருவாக்குவது இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டார்.  மேலும், பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய அம்சங்கள் என்று கருதப்படுகிறவை மீது மட்டும் கவனம் செலுத்துவதோடு நின்றுவிடாமல் சைபர் கிரிமினல்களின் குறிக்கோள்களை புரிந்துகொள்வது என்ற இலக்கை நோக்கி சைபர் செக்யூரிட்டி முயற்சிகளின் கூர்நோக்கம் மாறவேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.  சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு பதில்வினை ஆற்றுபவர்கள் என்பதாக அல்லாமல், தன்முனைப்புள்ள ஆலோசகர்களாக தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் (CISOs) தங்களை நிலைமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.  கூடுதலாக, இணக்கநிலை பயிற்சியானது புத்தாக்கத்தோடு இணைக்கப்பட வேண்டும் மற்றும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) முன்னெடுப்புகளிலும் மற்றும் வருடாந்திர அறிக்கைகளிலும் சைபர் செக்யூரிட்டி மீதான விவாதங்களை இயக்குனர்கள் குழு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

ISACA சென்னை கிளையின் தலைவர் திரு. வைத்தியநாதன் சந்திரமௌலி, இக்கிளையின் செயல்திட்ட இயக்குனர் திரு. மகேஷ் பாலகிருஷ்ணன், இக்கிளையின் துணைத்தலைவர் திரு. ஷ்ரீமதி ராகவ் ஆகியோரும் இந்நிகழ்வில், பங்கேற்பாளர்களை வரவேற்றும் மற்றும் இக்கருத்தரங்கின் ஸ்பான்சர்களுக்கு நன்றி தெரிவித்தும் உரையாற்றினர். 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை