சற்று முன்



காவேரி மருத்துவமனையின் K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வு !


குடும்பங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்தகுதி ஆர்வலர்களை ஈர்க்கும் காவேரி மருத்துவமனையின் K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வு !

புற்றுநோய் மற்றும் அதனை முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 4700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

10 கிமீ மற்றும் 5 கிமீ என இரு பிரிவுகள்!  

சென்னை, 28 ஜனவரி, 2024 - பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, காவேரி மருத்துவமனை, கடந்த ஆண்டு நிகழ்வின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, K10K ஓட்டத்தின் இரண்டாவது நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது. பெசன்ட் நகர், ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், உடற்பயிற்சி ஆர்வலர்கள், தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்கள், குடும்பங்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், மாணவர்கள் என 4700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒன்றிணைந்தனர்.

10 கிமீ மற்றும் 5 கிமீ பிரிவுகளை உள்ளடக்கிய இந்த முன்முயற்சி, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய சுகாதார கவலையாக இருக்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறித்தது. 10 கிமீ ஓட்டத்தினை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்து துவக்கி வைத்தார், மேலும் 5 கிமீ ஓட்டத்தினை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதிகரித்து வரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார அமைப்புகளின் மீது உண்டாகும் கணிசமான சுமை ஆகியவற்றினால், இந்தியாவில் புற்றுநோய் ஒரு வலிமையான சுகாதார சவாலாக உள்ளது. நோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, பெரும்பாலும் தாமதமான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. வழக்கமான சோதனைகள், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற வகையிலமைந்த புற்றுநோய் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள் இந்த சிக்கலைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. விழிப்புணர்வு, அணுகும் தன்மை மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையுடன், காவேரி மருத்துவமனை, புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களின் நோய் விளைவுகளை மேம்படுத்தவும் முயற்சிக்கிறது.

சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், புற்றுநோயைத் தடுப்பதில் விழிப்புணர்வின் முக்கியப் பங்கை வலியுறுத்திக் கூறுகையில், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக்கியத்துவம் குறித்து இன்னும் விழிப்புணர்வு இல்லை. நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், உயிர்வாழும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு ஆரம்பகால கண்டறிதல் என்பது மிகவும் முக்கியமானது. மேலும், இந்த புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தின் மூலம், புற்றுநோய்க்கான அறிகுறிகளை குறித்து தெரியப்படுத்துவதையும், செயலூக்கம் மிக்க சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்." என்று தெரிவித்தார். 

காவேரி குழும மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் இணை நிறுவனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், இந்த விழிப்புணர்வு ஓட்டத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நன்றி தெரிவித்தார் மற்றும் ஒரு உன்னதமான நோக்கத்திற்கு ஆதரவளித்த பங்கேற்பாளர்கள் அனைவரையும்  பாராட்டினார். அவர் கூறுகையில், "புற்றுநோய் சிகிச்சைக்கான எங்களின் பன்முக மற்றும் பிரத்தியேக அணுகுமுறையானது, நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான எங்கள் குறிக்கோளுடன் ஒருங்கிணைக்கிறது. இந்த ஓட்டம், புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக உடற்தகுதியை மேம்படுத்துவதை வலியுறுத்தவும் ஒரு தளமாகச் செயல்பட்டது. அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களின் உற்சாகமான பங்கேற்பை நாங்கள் பாராட்டுகிறோம். மதிப்புமிக்க ஆதரவிற்காக சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிரேட்டர் சென்னை மாநகராட்சிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறினார். 

10 கிலோமீட்டர் ஓட்டப் போட்டியில் தங்களின் சிறப்பான சாதனைகளுக்காக, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த வெற்றியாளர்கள் கொண்டாடப்பட்டனர்.


கருத்துகள் இல்லை