வீரவணக்கம் படத்திற்காக டி.எம்.எஸ் சவுந்தர்ராஜன் மகன் டி.எம்.எஸ் செல்வக்குமார் பாடிய முதல் திரைப்படப்பாடல் !
வீரவணக்கம் படத்திற்காக டி.எம்.எஸ் சவுந்தர்ராஜன் மகன் டி.எம்.எஸ் செல்வக்குமார் பாடிய முதல் திரைப்படப்பாடல் !
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி. எஸ். அச்சுதானந்தன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. தோழர் பி. கிருஷ்ணபிள்ளை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாக வரலாறையும், உரிமை போராட்டத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அனில் வி. நாகேந்திரன் இயக்கியுள்ள வீரவணக்கம் திரைப்படத்தின் டைட்டில் பாடல் தொழிலாளி வர்க்கத்தின் அன்புத் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி. எஸ். அச்சுதானந்தனின் நினைவாக சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.
கேரள மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்டு கட்சியை பலப்படுத்த பி. கிருஷ்ணபிள்ளையால் அழைத்து வரப்பட்ட பல வீர இளைஞர்களில் ஒருவர் தான் ஆலப்புழையை சேர்ந்த தோழர் வி. எஸ். அச்சுதானந்தன். நம் நாடு முழுக்க நடைபெற்ற பல்வேறு கம்யூனிஸ்ட் போராட்டங்களையும், அதை முன்னின்று நடத்திய தலைவர்களையும், அவர்களின் தியாகங்களையும் போற்றும் பாடல் தான் 'நல்லதோர் நாளையை எங்களுக்காக தந்து போனவரே' என்ற இந்தப் பாடல். திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் (23.7.2025) மாலை பாடல் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைவர்களும், தோழர்களும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து, நடத்திய போராட்டங்கள் தான் அடிப்படை மனித உரிமை முதல் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளன.
அந்தப் போராளிகளையும் போராட்டங்களையும் நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள "வீரவணக்கம்" திரைப்படப் பாடலை, பெருமதிப்பிற்குரிய மறைந்த தோழரும் கேரள மாநில மேனாள் முதலமைச்சருமான வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வெளியிடுகிறோம். தமிழ்நாடு மற்றும் கேரளாவின் வரலாறு, பாரம்பரியம், முற்போக்கான சிந்தனைகள் மற்றும் பரஸ்பர அன்பு ஆகியவற்றை தெளிவாக சித்தரித்திருக்கும் வீரவணக்கம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று ஆசிரியர் கி. வீரமணி இந்த விழாவில் கூறினார்.
பிரபல பின்னணிப் பாடகர் காந்தக் குரலோன் டி. எம். சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் டி. எம். எஸ். செல்வகுமார் முதன் முதலில் பாடியுள்ள திரைப்பட பாடல் இதுதான்.
இந்த செய்தியும் பலரது கவனத்தை ஈர்த்ததால் பாடல் வெளியான சில மணித்துளிகளிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடல் விசாரத் கிரியேஷன்ஸ் (VISARAD CREATIONS) யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
பாடல் -
https://youtu.be/TvYLuNveFjY








கருத்துகள் இல்லை