சற்று முன்



ரூம் பாய் திரை விமர்சனம் ‌! Review



‘ரூம் பாய்’ – சஸ்பென்ஸ் திரில்லர்: 

கூர்நோக்கு மையத்தில் இருந்து வெளியேறும் நாயகன் நிகில், ஏலகிரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் ரூம் பாயாக வேலைக்கு சேருகிறார். அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பல மோசடிகளை கண்டுபிடிக்கும் அவர், அதற்கான ஆதாரங்களை சேகரித்து விடுதியின் மேலாளரை கொடூரமாக கொலை செய்கிறார்.

இதன் பின்னர், வில்லன் கும்பல் நிகிலை தேட தொடங்குகிறது. அதே சமயம், கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமான வழக்கில் போலீசும் அவரை தேடுகிறது. இவ்விருவரிடமிருந்தும் தப்பிக்க முயலும் நிகில் யார்? அவருக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதே பல திருப்பங்களுடன் சொல்லப்படும் ‘ரூம் பாய்’ படத்தின் மையக்கரு.

அம்மா, அப்பா, தங்கை என சந்தோஷமாக வாழ்ந்த குடும்பத்தை இழந்து அனாதையாக மாறும் நாயகன், பழி தீர்க்கும் நோக்கில் பயணம் மேற்கொள்வது கதையின் முக்கிய கோடு. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, சஸ்பென்ஸ் மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் இயக்குநர் ஜெகன் ராயன் படத்தை விறுவிறுப்பாக உருவாக்கியுள்ளார்.

நாயகனாக அறிமுகமான சி.நிகில், உற்சாகமான நடிப்புடன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாகத் திகழ்ந்து முதல் படத்திலேயே நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்.

நாயகியாக நடித்துள்ள ஹர்ஷாவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலில் மட்டும் தோன்றுகிறார்.

வில்லனாக நடித்துள்ள அருண்ராஜாவை விட, கூர்நோக்கு மைய காப்பாளராக நடித்த பிரபாகர் தனது வில்லத்தனமான நடிப்பால் அதிகம் கவர்கிறார்.

இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், மனதில் நிற்கும் வகையில் பெரிதாக அமையவில்லை.

ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன், பெரும்பாலும் உட்புறக் காட்சிகளை கதைக்கு ஏற்றபடி படமாக்கியுள்ளார். வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக “பட்டர்பிளை கண்ணடிச்சி...” பாடல் மற்றும் அப்பாவின் பெருமையை பேசும் பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளது.

படத்தொகுப்பாளர் டி.வி.மீனாட்சி சுந்தர், திரைக்கதையின் திருப்பங்களை யூகிக்க முடியாதபடி அமைத்து விறுவிறுப்பை அதிகரித்துள்ளார்.

பெரிய பட்ஜெட் இல்லாததால் பிரமாண்ட காட்சிகள் குறைவாக இருந்தாலும், கதையை சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன். குறைந்த வசதிகளுடனும் ஒரு கிரைம் திரில்லரை நியாயமான முறையில் வழங்கிய முயற்சி பாராட்டுக்குரியது.

மொத்தத்தில், ‘ரூம் பாய்’ – விறுவிறுப்பான திரைக்கதையால் கவனம் ஈர்க்கும் ஒரு நல்ல முயற்சி.


Rating : 3 /



கருத்துகள் இல்லை