சட்டென்று மாறுது வானிலை’ திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெய் அவரது நடிப்பில் சட்டென்று மாறுது வானிலை’ மற்றும் நடிகை மீனாட்சி , யோகி பாபு , கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாபு கணேஷ்.
கதை ஆரம்பமே :
ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஜெய், மீனாட்சியை பார்த்தவுடன் காதலித்து, மறுநாளே தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார். புதுமண தம்பதிகள் தேன்நிலவுக்காக கொடைக்கானல் செல்கின்றனர். அங்கு கருடா ராம் நடத்தும் சொகுசு விடுதியில் தங்கும் இவர்களுக்கு எதிர்பாராத சிக்கல் உருவாகிறது.
இதற்கிடையில், மீனாட்சியின் அமைச்சர் தந்தை, ஜெய் – மீனாட்சி தம்பதிகளை பிரித்து, மகளுக்கு மறுமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். ஒரு பக்கம் விடுதியில் ஏற்பட்ட பிரச்சினை, மறுபக்கம் குடும்ப சதி ஆகியவற்றால் சிக்கித் தவிக்கும் ஜெயின் வாழ்க்கையில் திடீரென பெரிய திருப்பம் ஏற்படுகிறது. மீனாட்சி மர்மமாக காணாமல் போக, அதற்கு ஜெய் தான் காரணம் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை கைது செய்கின்றனர்.
இவ்வாறு சிக்கல்களில் சிக்கிய ஜெய், தனது மனைவியை மீண்டும் சேர்த்தாரா? உண்மையை நிரூபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பு:
நாயகனாக நடித்துள்ள ஜெய், வழக்கமான துள்ளல் நடிப்புடன் கவர்ந்தாலும், சில இடங்களில் மற்றொரு நடிகரின் பாதிப்பில் நடித்தது போல தோன்றுகிறது. அதே நேரத்தில், காதல் மற்றும் உணர்ச்சி காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜன், அழகிலும், நடிப்பிலும் சிறப்பாக திகழ்கிறார். தந்தை மீதான கோபம், கணவர் மீதான காதல் போன்ற உணர்வுகளை சரியான அளவில் வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.
யோகி பாபு, நகைச்சுவை காட்சிகளில் தனது வழக்கமான பாணியில் முயற்சித்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை. அவருடன் இணையும் ஆதித்யா கதிர் சில இடங்களில் சிரிப்பை தருகிறார்.
வில்லனாக கருடா ராம் மற்றும் சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
தொழில்நுட்பம்:
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், படத்தை வண்ணமயமாகவும் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். காட்சிகளின் தரம் பாராட்டுக்குரியது.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் துள்ளலாக அமைந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது.
படத்தொகுப்பில் இன்னும் சற்றுக் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதே குறையாகும்.
இயக்கம்:
இயக்குனர் பாபு விஜய், இணையம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் தனியுரிமை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் கமர்ஷியல் கோணத்தில் சொல்ல முயன்றுள்ளார். காதல், திருப்பங்கள், சஸ்பென்ஸ் ஆகியவற்றை இணைத்து கதையை நகர்த்தியிருந்தாலும், திரைக்கதையில் கூடுதல் நெருக்கடி மற்றும் கவனம் இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில்:
காதல், சஸ்பென்ஸ், குடும்ப உணர்வுகள் கலந்து உருவான இந்த படம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சென்றாலும், முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது.
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை