சற்று முன்



ராம் அன்ட் லீலா – திரை விமர்சனம் !



திருமணத்திற்காக ஏங்கும் ராம், வர்டிகாவை காதலிக்கிறார். ஆனால், மாலை 6 மணிக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்று வர்டிகா விதிக்கும் வித்தியாசமான நிபந்தனை, ராமுக்கு பல்வேறு குழப்பங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் இருக்கும் எதிர்பாராத ரகசியத்தை தெரிந்துகொள்ள முயல்வதுதான் படத்தின் கதை.

ராம் கதாபாத்திரத்தில் ரியோ, அப்பாவித்தனம் கலந்த காமெடி நடிப்பால் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பு ஓவர் டோஸாக தெரிந்தாலும், காதலுக்காக ஏங்கும் இளைஞராகவும், பிரச்சனையை சமாளிக்க போராடுபவராகவும் நன்றாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகை வர்டிகா அழகாக இருக்கிறார். கதையின் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும், நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

சேத்தன், மாளவிகா அவினாஷ், முனீஷ்காந்த், மாகாபா உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.

மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக்குகிறது. அன்கிட் மேனனின் பாடல்களும் பின்னணி இசையும் இனிமையாக உள்ளன. முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி வேகம் பிடித்து நகைச்சுவையுடன் கலகலப்பாக செல்கிறது.

கதையின் மையக்கரு ஏற்கனவே பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தாலும், அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற காதல் மற்றும் நகைச்சுவையுடன் கொடுத்திருப்பது இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணனின் பலம். குறிப்பாக, நாயகியின் பிரச்சனையை யூகிக்க முடியாத வகையில் வைத்திருப்பதும், அதன் பின்னணியை சுவாரஸ்யமாகச் சொன்ன விதமும் படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும், காதல், எதிர்பாராத திருப்பம் மற்றும் காமெடி கலந்த எளிமையான பொழுதுபோக்கு படமாக ‘ராம் அன்ட் லீலா’ ரசிக்க வைக்கிறது.

ராம் அன்ட் லீலா – காதலுக்கு வரும் எதிர்பாராத சிக்கல்களை காமெடியாக சொல்லும் கலகலப்பான படம்.

Rating : 3 /



கருத்துகள் இல்லை