ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரை விமர்சனம் !
தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் தனிமையில் வளரும் ஆண்டனி, மதுவுக்கு அடிமையாகிறார். காதல், திருமணம் போன்ற உறவுகளை விரும்பாத அவர், தனிமையைப் போக்குவதற்காக பாலியல் தொழிலாளர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படியொரு சந்திப்பில் மதுமிதா தாஸை சந்திக்கும் ஆண்டனியின் வாழ்க்கையில் காதலும், புதிய நம்பிக்கையும் பிறக்கிறது.
இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கும் நிலையில், ஆண்டனியின் மதுப்பழக்கம் அவர்களது காதலுக்கு தடையாகிறது. மதுமிதா அவரை விட்டு பிரிந்து செல்ல, மீண்டும் தனிமையில் சிக்கிக்கொள்ளும் ஆண்டனியின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனியும், மதுமிதா தாஸும் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக இருவரது உரையாடல்களை மட்டுமே மையமாகக் கொண்டு நகரும் காட்சிகளை தங்களது நடிப்பால் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள். தமிழ் தெரியாத மதுமிதாவை பெங்காலி பெண்ணாகவே கதைக்குள் கொண்டு வந்திருப்பதும், அவர் பேசும் சில தமிழ் வார்த்தைகளும் ரசிக்க வைக்கின்றன.
பியேட்ரோ வில்லானியின் இயற்கை ஒளியை மையப்படுத்திய ஒளிப்பதிவு படத்தின் இயல்புத்தன்மைக்கு பலம் சேர்க்கிறது. இசையும் பின்னணி இசையும் காதல் உணர்வுகளுக்கு துணை நிற்கின்றன.
பாலியல் தொழிலாளிக்கும் ஒரு தனிமையான மனிதருக்கும் இடையே உருவாகும் காதலை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருப்பது படத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில், அதிகமான ஆங்கில வசனங்கள் மற்றும் நீளமான காட்சிகள் சற்று சோர்வை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கடற்கரை காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது படத்தின் வேகத்தை குறைக்கிறது.
மொத்தத்தில், குறைகள் இருந்தாலும் தனிமை, காதல் மற்றும் மனித உணர்வுகளை எளிமையாகப் பேசும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’, மனதைத் தொடும் ஒரு வித்தியாசமான காதல் படம்.
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை