தாய் நிலம்’ திரை விமர்சனம் !
2008-ம் ஆண்டு தமிழ் ஈழத்தில் இறுதிக்கட்ட போர் நடக்கும் பின்னணியில் கதை நகர்கிறது. போரில் மனைவியை இழந்த அமர் ராமச்சந்திரன், தனது மகள் தமிழனியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற அச்சத்தில், அவரை தமிழகத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்க வருகிறார். ஆனால், எதிர்பாராத சூழலால் மகளை ஒப்படைக்க முடியாமல் சாலையோர வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்.
அவருக்கு உதவும் மனிதர்களால் மகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கை நிறைவேறும் முன்பே அவர் அஞ்சிய துயரம் நிகழ்கிறது. இதை இதயத்தை நொறுக்கும் வகையில் பதிவு செய்கிறது படம்.
நாயகன் அமர் ராமச்சந்திரன், போரால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையின் பயத்தையும் வலியையும் கண்கள் மற்றும் முகபாவனைகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழனியாக நடித்த நேஹா அமர், அதிகம் பேசாமல் தனது பார்வையாலேயே குழந்தையின் அச்சத்தையும் வேதனையையும் உணர வைக்கிறார். பாலா சிங் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை இயல்பாக செய்துள்ளனர்.
பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு கதையின் வலியை அழுத்தமாக கடத்துகிறது. அவுசேப்பச்சனின் பின்னணி இசை உணர்வுகளுக்கு வலு சேர்க்கிறது. டீஜோ பி.வர்க்கீஸின் படத்தொகுப்பு மெதுவாக நகர்ந்தாலும் கதையின் தாக்கத்தை குறைக்கவில்லை.
இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன், ஈழப் போரால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் வலியையும், அவர்களின் கேள்விக்குறியான எதிர்காலத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி மனதை விட்டு நீங்காத அளவுக்கு அமைந்துள்ளது.
போரின் கொடுமையை விட, போருக்குப் பிறகு குழந்தைகள் எதிர்கொள்ளும் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தும் படைப்பு ‘தாய்நிலம்’.
Rating : 3.5 / 5








கருத்துகள் இல்லை