சற்று முன்



வயிற்றுப் பகுதியில் பரவும் தீவிர புற்றுநோய்க்கான அரிதான ஹைபெக் கீமோதெரபி சிகிச்சை: 200-க்கும் அதிகமாக செய்து காவேரி மருத்துவமனை சாதனை !


வயிற்றுப் பகுதியில் பரவும் தீவிர புற்றுநோய்க்கான அரிதான ஹைபெக் கீமோதெரபி சிகிச்சை: 200-க்கும் அதிகமாக செய்து காவேரி மருத்துவமனை சாதனை ! 

சென்னை, நவம்பர் 18, 2026: காவேரி மருத்துவமனை 200-க்கும் மேற்பட்ட ஹைபெக் (HIPEC) எனும் ‘ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி’ சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்த சிகிச்சை பெரிட்டோனியம் எனும் வயிற்றுப் பகுதியின் உட்சவ்விற்கு பரவியுள்ள புற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் ஒரு அரிதான கீமோதெரபி சிகிச்சையாகும். இதில் வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபி மருந்து பயன்படுத்தப்படுகிறது. 


தமிழகத்தில் ஹைபெக் சிகிச்சை ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் செய்யப்படுகிறது. இந்த துறையில் தனது நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்த காவேரி மருத்துவமனை, ஹைபெக் மற்றும் ‘சைட்டோரிடக்டிவ்’ என்னும் புற்றுநோய் கட்டியைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்களுக்கென்று ஒரு பிரத்யேக மையத்தையும் தொடங்கியுள்ளது. இம்மையம் முற்றிய நிலையிலுள்ள வயிற்றுப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தும். 


சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையில் கண்ணுக்கு தெரிந்த புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, ஹைபெக் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையின் போது வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபி மருந்து நேரடியாக வயிற்றுக் குழிக்குள் செலுத்தப்பட்டு எஞ்சியிருக்கும் கண்களுக்குத் தெரியாத நுண்ணிய புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. சைட்டோரிடக்டிவ் மற்றும் ஹைபெக் சிகிச்சைகளை இணைந்து செய்வதன் மூலம், நோய் பாதித்த இடத்தில் தீவிர சிகிச்சை அளிக்கவும், கீமோதெரபி மருந்து உடலின் மற்ற பகுதிகளின் மேல் அதிகம் படாமல் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது. 


கருப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உட்பட, வயிற்றுக்குழி மற்றும் வயிற்று உட்சவ்வைப் பாதித்துப் பரவும் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மருத்துவரீதியாக தகுதியானவர்களுக்கு இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


ஹைபெக் சிகிச்சை அளிப்பது ஒரு கூட்டு முயற்சியாகும். சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவில் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவப் புற்றுநோயியல் நிபுணர்கள், நோயியல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். இந்த அறுவை சிகிச்சை நீண்ட நேரம் நடைபெறும் என்பதாலும், கணிசமான இரத்த இழப்பு மற்றும் வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அனுபவம் வாய்ந்த மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக் குழுவும் இதற்கு அவசியமாகிறது. இவர்களுக்குத் துணையாக இத்தகைய நோயாளிகளைப் பராமரிப்பதில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் 

தேவைப்படுகின்றனர்.


முன்னதாக நோயாளிகளை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு நோய் பரவியுள்ள அளவை துல்லியமாக கண்டறிவதற்கு மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படும். இதற்கு அனுபவம் வாய்ந்த கதிரியக்கவியல் நிபுணர்கள் தேவை. 


இச்சிகிச்சைக்கு கீமோதெரபி திரவத்தைச் சுமார் 41-43°C வெப்பநிலைக்குச் சூடாக்கி, வயிற்றுக்குழிக்குள் சுழலச் செய்து, அதன் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் பிரத்யேக இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய பன்றுபட்ட தேவைகளால் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவ மையங்களில் மட்டுமே ஹைபெக் சிகிச்சை வழங்கப்படுகிறது. 


ஹைபெக் சிகிச்சை குறித்து பேசிய காவேரி மருத்துவமனையின் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் சுஜய் சுசிகர் கூறுகையில், “200 ஹைபெக் சிகிச்சைகள் என்ற மைல்கல்லை நாங்கள் கடந்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் எங்கள் குழுவின் அனுபவத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. பெரிட்டோனியத்திற்குப் பரவியுள்ள முற்றிய நிலை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹைபெக் ஒரு முக்கியமான சிகிச்சை வாய்ப்பை வழங்குகிறது. வழக்கமான நரம்பு வழி கீமோதெரபி மருந்துகள் இப்பகுதியில் உள்ள புற்றுநோய் படிவுகளை முழுமையாகச் சென்றடையாமல் போகலாம். ஆனால், சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபியை நேரடியாக வயிற்றுக்குழிக்குள் சுழலச் செய்வதன் மூலம் ஹைபெக் இந்தப் பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது,” என்றார்.

காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் தனது கருத்தில், “முற்றிய நிலையிலுள்ள வயிற்றுப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பது எப்போதுமே மிகவும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. ஹைபெக் சிகிச்சையின் மூலம் நோயாளிகளுக்குப் பயனுள்ள சிகிச்சை தீர்வுகளை எங்களால் வழங்க முடிகிறது. சிகிச்சைகளின் பலன் சிறப்பாக அமைவதற்காக , சரியான வசதிகள், மருத்துவ நிபுணத்துவம் மற்றும் பல்துறை அணுகுமுறை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் சிகிச்சை பெற்றவர்களில், முற்றிய நிலை கருப்பை புற்றுநோய் மற்றும் பெரிட்டோனியல் பாதிப்புடன் சிறப்பு சிகிச்சைக்காக மொரீஷியஸ் நாட்டில் இருந்து சென்னை வந்த ஒரு பெண்மணியும் அடங்குவார். சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைபெக் சிகிச்சைக்குப் பிறகு, அவர் முழுமையாக குணமடைந்து நாடு திரும்பினார். மற்றொருவர், கருப்பை புற்றுநோய் மற்றும் பெரிட்டோனியல் பரவலால் பாதிக்கப்பட்ட 32 வயது தாய் ஆவார்; அவருக்கும் விரிவான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஹைபெக் சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை